ராஜ்ய சபை உறுப்பினரான திருமதி கனிமொழிக்கு நீதிமன்ற காவல் தேவையா? .... ஒரு ஆங்கில படத்தில் வழக்கறிஞர் தன் கட்சிகாரருக்காக வாதாடுகையில், "... என் கட்சிகாரர் மிகவும் மோசமானவர், யாரையும் மதிக்கமாட்டார், எடுத்தெரிந்தாற்போல் பேசுவார், திமிராக நடந்து கொள்வார், அவரை எதிர் கட்சிக்காரருக்கு மட்டுமல்ல, எனக்கும் தான் பிடிக்காது.... ஆனால் இப்படிப்பட்ட காரணங்களுக்காக அவர் மீது கொலை பழி சாட்டுவது நியாயமல்ல" ... என்று கூறுவார்.
திமுக மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு மிகவும் மோசமானதுதான், அதற்கு அவர்கள் விலையும் கொடுத்துவிட்டார்கள். அதிக தொகுதிகள், கேட்ட தொகுதிகள், தங்கபாலுவை வைத்து ....கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி........ என்பதுபோல் உட்கட்சி குழப்பம் (தங்கபாலுவுக்கு வேட்பு மனுவை முறைப்படி தாக்கல் செய்ய தெரியாதா?), இதனால் காங்கிரஸ் காரர்களே எதிரணிக்கு ஒட்டு போட தூண்டப்பட்டது, கூட்டணி கட்சியை கைவிட்டது என்று கூடி கெடுத்தது காங்கிரஸ். மற்ற மூன்று மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்ட காங்கிரஸ், தமிழ்நாட்டில் மட்டும் எப்படி மண்ணை கவ்வியது? மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுக்கணும் என்று திமுகவை கைவிட்டு குழியில் தள்ளியது காங்கிரஸ்.
176000 கோடி அரசுக்கு வருமான இழப்பு. அந்த அளவுக்கு யாரோ பயனடைந்துள்ளனர். அதற்கு பதிலாக அவ்வளவு பணத்தையுமா பயனடைந்தவர்கள் திமுகவினருக்கு கொடுத்திருப்பார்கள்?
திருட்டு பொருளுக்கு தீட்டு விலை. அதிகபட்சம் 20000 கோடிக்கு மேல் இதனால் யாரும் (ராசா, திமுக, etc ) பயனடைந்திருக்கமாட்டார்கள். இந்த வரம்பு மீறல் நடந்ததற்கு முன்னரும் , நடக்கும் போதும் ஜனநாயகத்தின் இரண்டாவது தூணான அதிகார வர்க்கம் என்ன செய்துகொண்டிருந்தது? இதில் ராஜாவுக்கு மட்டும் தான் பங்கு இருக்கின்றதா? அவ்வளவு திறமைசாலியா நம் ராஜா?
மதுவகைகளை கடத்தி விற்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் நாடு ஒன்றில் மது கடத்தல்காரனிடம் மறைவிடத்தில் மதுவை விலைக்கு வாங்கிய அந்த நாட்டு நீதிபதி அவனிடம் சொன்னானாம், "நீ போலீசில் மாட்டிக்கொண்டால், நானே உனக்கு மரண தண்டனை விதிக்க நேரிடும், ஜாக்கிரதையாய் இரு" என்று!
1984 சீக்கிய இன படுகொலையை திட்டமிட்டு செயல்படுத்திய காங்கிரஸ், தமிழின படுகொலையை தட்டி கேட்காத காங்கிரஸ், சினிமா கதாநாயகன் போல் பாதுகாப்பு முறைகளை மதிக்காமல், இரண்டு சக்கர வண்டியில், போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க சென்ற ராகுல், சிறுபிள்ளைதனமாக எழுபது அடி பள்ளம் முழுக்க சாம்பல் உள்ளது, அவை எல்லாம் மனிதர்களை எரித்த சாம்பல் என்று அறிக்கைவிட்ட அவலம் நிகழ்ந்த காங்கிரஸ், ஏதோ சுத்த சன்மார்க்கர்கள் போல் குற்றம் செய்தவர்களை சட்டம் சும்மா விடாது என்று அறிக்கை விடுவது யாரை ஏமாற்றுவதற்கு?
குற்றம் நடக்கும் போதும், அதற்கு முன்னரும் பதவில் இருந்தவர்கள், அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர்கள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள்? அவர்களுக்கு தண்டனை கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
குற்றம் நடந்த பிறகு பயனடைந்தவர்கள் பட்டியலை கையில் வைத்து கொண்டு அவர்களுக்கு உரிய தனி மனித சுதந்திரத்தை பறிப்பது தவறானது. இந்த தவறை JJ விஷயத்தில் திமுகவும் செய்தது. குற்றம் சாட்டியஉடனே, நிரூபிக்க படாத குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் என்ன பெயரை மாற்றிக்கொண்டு, மாறுவேடத்தில், கள்ள கடவுச்சீட்டு கொண்டு நாட்டை விட்டு ஓடியா போய்விட போகிறார்கள்?
தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படும்போது நமது அடிப்படை ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது. இதை நாம் அனுமதிக்க கூடாது. இதுவரை சிபிஐ தூங்கிகொண்டிருந்தபோது சாட்சியங்களும் ஆதாரங்களும் என்னவாயின?
கனிமொழியை கைது செய்ய தேர்தல் முடிவுகளுக்காக காத்துகிடந்து ஏன்? மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சிதானே? ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது ஒரு சட்டம், இல்லாதபோது ஒரு சட்டமா? இதுதான் நேர்மையான விசாரனையா?
சிபிஐ ஆடி அசைந்து கொண்டு விசாரணை நடத்திக்கொண்டு இருக்கும், அதுவரை இவர்களை சிறையில் வைத்திருப்பார்கள? அப்படி சிபிஐ குற்றங்களை நிரூபிக்க தவறினால், பறிக்கப்பட்ட தனி மனித சுதந்திரங்களுக்கு என்ன விலை கொடுப்பார்கள்?
எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களை எல்லாம் சிறையில் அடைத்துக்கொண்டு, அவர்களுக்கு பினைவிடுப்பு கொடுக்ககூடாது என்று வாதாடி நேரத்தை வீணடிப்பதைவிட, விசாரணையில் முனைப்பை காட்டி குற்றவாளிகளை ஆதரங்களுடன் கைது செய்து தண்டனை வாங்கிகொடுங்கள். அதுவரை தனி மனித உரிமைகளை பறிக்காதீர்கள்.
ஜோசப்.