Friday, May 13, 2011

2011-மீண்டும் ஜெயலலிதா முதல்வராகிறார்.

தி மு க மீண்டும் எழுமா என்பது வரும் ஐந்து ஆண்டுகளில் AIADMK எப்படி ஆட்சி செய்யபோகிறது என்பதை பொறுத்துதான் இருக்கிறது. மக்களால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து சொந்த நலன்களில் கவனம் செலுத்தியதே DMK வின் வீழ்ச்சிக்கு காரணம். 

அறுவடையில் மட்டும் பங்கு கொண்டவர்கள் செய்த தவறுகள்,  உழுது விதைத்து வளர்த்தவர்களுக்கு வினையாய் போய்விட்டது. தன் வாழ்நாள் முழுவதும் கட்சிக்காக உழைத்து, வாழ்நாள் சாதனையாளர் என்ற முடியை சூடுவதற்குள்,  தன் குடும்ப உறுப்பினர்களும் கட்சியினரும் சேர்ந்து செய்த ஊழல்களினாலும் தான்தோன்றித்தனங்களினாலும் முகத்தை மூடிக்கொண்டு அவமானப்பட்டு தன் வாழ்க்கை தோல்வியில் முடிவதை இந்த தள்ளாத வயதில் சகித்துக்கொண்டிருக்கும் கலைஞரை பார்க்க பரிதாபமாக உள்ளது. 


DMK குடும்பத்தில் பிளவு ஏற்படுமா என்று TIMES NOW டிவி யில் கேட்கப்பட்டபோது "எங்கள் குடும்பத்தில் பிளவு ஏற்படாது" என்று குஷ்பூ உரிமை எடுத்து கொண்டாலும் நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தில் உங்கள் பேச்சுக்கள் எங்களை எரிச்சல் அடைய செய்தன. 

குஷ்பூ, வடிவேலு, பாக்கியராஜ் ஆகியவர்கள், "எள் தான் எண்ணைக்கு காய்கிறது, எலி புழுக்கை எதற்கு காய்கிறது?" என்ற பழமொழியை நினைவூட்டினார்கள். 

தங்கள் வாழ்க்கையையே தமிழ் நாட்டிற்காக அர்ப்பணித்தவர்கள், கண்ணியம் மிக்கவர்களான பகுத்தறிவு பகலவன், பேரறிஞர், கலைஞர், வைகோ  போன்றவர்கள் அலங்கரித்த பிரசார மேடைகளை இப்போது அலங்கரித்தவர்கள் யார்? அவர்களை ஏன் அனுமதித்தீர்கள்? 

ரத்தத்தை சூடாக்கி பகுத்தறிவை தூசிதட்டிய உங்கள் அம்பு பேச்சுக்கள் எங்கே?  நகைச்சுவை நம் மண்ணில் மலிந்து கிடக்கின்றது. அதை கேட்கவா உங்களை நாடினோம்? 
ஜெயலலிதாவின் பெயர் கொண்ட அனைத்தையும் விமர்சனம் செய்துவிட்டு பெயர் மாற்றினீர்கள் அதில் நியாயம் இருந்தது, பிறகு எதற்கு எல்லா திட்டங்களுக்கும் "கலைஞர்" திட்டம் என்று பெயர் வைத்தீர்கள்? பொது விநியோக பொருள்களின் பாக்கெட்களில் உங்கள் போட்டோ ஏன் வந்தது?

அரசாங்கம் பார்க்க வேண்டிய வேலைகளை பார்க்காமல் விட்டுவிட்டு, எங்கள் வீடுகளுக்கு டிவி  வாங்கி தர உங்களை யார் கேட்டது? என் மனைவியை கர்ப்பமாக்கும் எனக்கு அவளுக்கு வேண்டியதை செய்ய முடியாதா?  நீங்கள் யார் இதையெல்லாம் கொடுப்பதற்கு? இதெல்லாம் தனி நபர்கள் தங்களுக்கு செய்துகொள்ள கூடியவை. 

தனி மனிதனால் செய்யமுடியாததை அரசாங்கம் செய்ய வேண்டும். சாலைகள் அமைக்க வேண்டும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும், மக்களின் வரிப்பணம் வீணாகாமல் சரியான திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும்.


இப்படி விதை நெல்லை சமைத்து சாப்பிட்டால் எதிர்காலம் என்னாவது? தன் வாலை தனக்கே சமைத்து போட்டாலும் கறி சோறு போட்டான் என் எஜமானன் என்று நாய் வேண்டுமானால் நன்றியுடன் இருக்கலாம்.  ஆனால் எங்கள் வரிப்பணத்தை எடுத்து எங்களுக்கே கொடுத்துவிட்டு "நாங்கள் சாதித்தோம், சொன்னதை செய்தோம், தமிழக மக்கள் நன்றியுடன் வாக்களிப்பார்கள்"  என்று எங்களை ஏளனம் செய்ததை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எரிச்சலடைந்துவிட்டோம் மன்னித்து விடுங்கள். 

உப்பை வாரி தின்றவன் தண்ணீரை குடிக்கவேண்டும், வினை விதைத்தவன் வினை அறுப்பான், தீதும் நன்றும் பிறர் தர வாரா. போன்ற பழமொழிகள் தமிழுக்கு பெருமை. ஆனால் இவற்றில் உங்கள் கட்சியினருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா? பொது வாழ்க்கைக்கு வந்த உடனேயே கனிமொழிக்கு இந்த சோதனைகள் எதற்கு? 


கொள்கைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற பாரம்பரியம் இப்போது, கொள்ளைகளுக்காகவும், அதிகார வரம்புமீரல்களுக்காகவும், கூடி சதி செய்ததற்காகவும் சிறை செல்வது வெட்ககேடுதானே?

ஜோசப்







No comments:

Post a Comment